பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேருக்கு எதிராக விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
2024 ஜூலை 5-ஆம் தேதி, சென்னை சின்னமலை அருகே தனது வீட்டின் முன்னிலையில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இந்தக் கொலை வழக்கில் மொத்தமாக 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 26 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நாகேந்திரன் உள்ளிட்ட 17 பேர், தங்கள்மீது விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கின் போது, காவல்துறை தரப்பில், கைது செய்யப்பட்டவர்கள் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவர்கள் என்பதால், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக வாதிடப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில், கைது மற்றும் குண்டர் சட்ட உத்தரவு இடையே காலதாமதம் இருந்ததாகவும், அதிகாரிகள் மனதை செலுத்தாமல் இயந்திரத் தனத்தில் உத்தரவு பிறப்பித்ததாகவும் வலியுறுத்தப்பட்டது.
விசாரணையை தொடர்ந்து, இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், 17 பேருக்கு எதிராக விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தனர். இதற்கேற்ப, “குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து இவர்கள் அனைவருக்கும் ஜாமின் வழங்கிவிட கூடாது. வழக்கின் தீவிரத்தை முழுமையாக பரிசீலித்த பிறகே ஜாமின் மனுக்கள் மீது தீர்மானிக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.