மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 96,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை பணிகள் நடைபெற்றது. இதில் அறுவடை செய்யப்பட்ட நெல் 144 அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சித்தர்;காடு, எருக்கூர், மாணிக்கப்பங்கு சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டன. சித்தர்க்காடு சேமிப்பு கிடங்கு முழு கொள்ளளவை எட்டிய நிலையில், சுமார் 2,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள், கிடங்கு வளாகத்தில் திறந்தவெளியில் தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக மழை பெய்த நிலையில், திறந்தவெளியில் தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நெல் மூட்டைகள், மழைநீரில் நனைந்து முளைத்து நாற்றுக்கள் வெளியில் வந்து சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் கூறுகையில், கடந்த குறுவைப் பருவத்தில் கொள்முதல் நிலையங்கள் மூலம் 66,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு கொள்முதல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால், நெல் மூட்டைகள் சித்தர்காடு கிடங்கில் தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டது. தார்ப்பாய்களில் மயில் உள்ளிட்ட பறவைகள் அமர்ந்து செல்லும்போது ஏற்படும் துளைகளின் வழியாக மழைநீர் உட்புகுந்து விடுகிறது. அந்த வகையில், எங்கோ ஒருசில இடங்களில் மழை சாரல் பட்டு சில நெல் மூட்டைகள் நனைந்து முளைத்துள்ளது. அவற்றை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது என்றனர். இதனிடையே, மயிலாடுதுறை மையப்பகுதியில் நிரந்தர நெல் சேமிப்பு கிடங்கு கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















