சென்னை :
வீட்டுக் கடன், வாகனக் கடன் அல்லது தனிக் கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு! இனி உங்கள் மாதாந்திர EMI தொகை குறைய வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைக்கவில்லை, வங்கிகளும் எந்த சிறப்புத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. ஆனால், வட்டி விகிதம் குறைவதற்கான ரகசியம் உங்கள் CIBIL ஸ்கோரில் தான் இருக்கிறது.
CIBIL ஸ்கோர் என்றால் என்ன?
CIBIL ஸ்கோர் என்பது ஒருவரின் நிதி நம்பகத்தன்மையை மதிப்பிடும் கணக்கெடுப்பு முறை. இது 300 முதல் 900 வரை மதிப்பெண்களைக் கொண்டது. ஸ்கோர் அதிகமாக இருந்தால், வங்கிகள் குறைந்த வட்டியுடன் கடன் வழங்கும். அதாவது, நிதி ஒழுக்கம், கடன் திருப்பிச் செலுத்தும் பழக்கம், கிரெடிட் கார்டு பில் கட்டும் நேர்மை போன்றவை அனைத்தும் இந்த ஸ்கோரை நிர்ணயிக்கின்றன.
RBI-யின் புதிய உத்தரவு
அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ள ரிசர்வ் வங்கியின் புதிய சுற்றறிக்கையின்படி, வங்கிகளின் ‘ஸ்பிரட்’ மீதான மூன்று வருட லாக்-இன் (Lock-in) காலம் நீக்கப்பட்டுள்ளது. இதனால், இனி வங்கிகள் உங்கள் CIBIL ஸ்கோர் மேம்பட்டால் வட்டி விகிதத்தை மாற்றி, EMI தொகையைக் குறைக்கலாம்.
‘ஸ்பிரட்’ என்றால் என்ன?
வங்கிகள் வழங்கும் கடன் வட்டி இரண்டு பகுதிகளாக இருக்கும் :
- பெஞ்ச்மார்க் விகிதம்: இதை ரிசர்வ் வங்கி தீர்மானிக்கிறது.
- ஸ்பிரட்: இது வங்கியின் கொள்கை மற்றும் உங்கள் நிதி நம்பகத்தன்மையைப் பொறுத்தது.
முன்னர் மூன்று ஆண்டுகள் வரை இதை மாற்ற முடியாது என்ற கட்டுப்பாடு இருந்தது. தற்போது RBI அந்த தடையை நீக்கியுள்ளது.
உங்கள் CIBIL ஸ்கோரை உயர்த்தி EMI குறைக்கலாம்
நீங்கள் சமீபத்தில் கடனை திருப்பிச் செலுத்தியிருந்தாலோ, கிரெடிட் கார்டு பில்களை நேரத்தில் கட்டியிருந்தாலோ, உங்கள் CIBIL ஸ்கோர் உயரும். அப்போது உங்கள் வங்கியை தொடர்பு கொண்டு, EMI குறைப்பு கோரிக்கை செய்யலாம். வங்கி மறுத்தால், புதிய RBI சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி கோரலாம்.
இது மட்டுமல்லாது, ரிசர்வ் வங்கி விரைவில் புதிய மாற்றத்தையும் அறிவிக்க உள்ளது. இதன்படி, வங்கிகள் இதுவரை 15 நாட்களுக்கு ஒருமுறை CIBIL ஸ்கோர் தகவலைச் சமர்ப்பித்தன. இனி அது வாரந்தோறும் சமர்ப்பிக்கப்படும்.
இந்த நடவடிக்கை, சில மோசடிக்காரர்கள் கடன் வாராக்கடனாக மாறும் முன்பே புதிய லோன்களை எடுக்கும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது. இதனால், கடன் மோசடிகள் குறையும், நம்பகமான வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.















