சென்னை: அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய வணிகர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், “அமெரிக்கா விதித்த 50% வரி இந்திய பொருளாதாரத்திற்கு சவாலாக உள்ளது. இதனை சமாளிக்க, மத்திய அரசு சார்பில் ஏற்றுமதி செய்யும் அனைத்து துறையினருடனும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம். டில்லியிலும் பல்வேறு வணிக பிரதிநிதிகள் என்னை சந்தித்தனர்.
கோவிட் காலத்திலும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தது போல, இந்நேரமும் ஏற்றுமதியாளர்கள் கஷ்டப்படாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது. எந்த தொழிலும் மூடப்படாத வகையில் நாங்கள் உதவி செய்வோம்.
அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியால் நஷ்டமடைபவர்களுக்கு விரைவில் நல்ல அறிவிப்பு வரும். அவர்களுக்கு அரசு பக்கபலமாக இருக்கும்,” என நிர்மலா சீதாராமன் கூறினார்.

















