வேலூர் மாவட்டத்தின் காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் போகும் வழியில், மங்கலம் என்னுமிடத்தில் ஞானமலை முருகன் கோவில் அமைந்துள்ளது.
ஞானமலையின் வடமேற்குப் பகுதியில் வள்ளிமலையும், வடக்கில் சோழசிங்கபுரம் என்னும் சோளிங்கர் மலையும், வடகிழக்கில் தணிகை மலையும் அமைந்துள்ளன. வள்ளமலை, ஞானமலை, திருத்தணிகை மலை மூன்றும் முக்கோணவடிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உயிர்களுக்கும் ஞான வடிவமாக – ஞானகுருவாகக் காட்சியளிப்பவன் அந்த ஞானபண்டிதன் முருகப்பெருமான். ஞான மூர்த்தியான முருகப்பெருமான் குடிகொண்ட ஒரு மலையே ஞான வடிவில் அமைந்துள்ளது. அதன் காரணமாகவே அந்த மலை ஞானமலை என்றே போற்றப்படுகிறது.
வண்ணக்குறமகள் வள்ளிப்பிராட்டியை கரம் பற்றிய முருகப்பெருமான், வள்ளிமலையிலிருந்து திருத்தணிகை மலைக்குப் புறப்பட்டார். வழியில் தென்பட்டது ஒரு சிறிய குன்று. குன்றென்றாலே குமரப்பெருமானுக்குக் குதூகலம் அல்லவா? வள்ளியம்மையோடு முருகப்பெருமான் அந்தக் குன்றில் தங்கினார்.
கொஞ்சம் இளைப்பாறினார். அந்த மலைதான் ஞானமலை என்று புராணங்கள் கூறுகின்றன. அதற்கு அழுத்தமான சான்றாக முருகப்பெருமானின் திருவடிச் சுவடுகளும் இங்கு காட்சியளிக்கின்றன. மலையடிவாரத்திலிருக்கும் ஞானமலை ஆசிரமத்தில் குறமகள் தழுவிய குமரன் உற்சவ சிலையை காட்சியளிக்கிறார்.
மலையடிவாரத்தில் அழகே வடிவான ஞானஸித்தி விநாயகர் கிராம தேவதை பொன்னியம்மன் ஆலயங்களை வணங்கிவிட்டு மலைமீது ஏறப் படிக்கட்டுகளை கடக்க
வேண்டும். வழியில் அருள்பாலிப்பவர் ஞான தட்சிணாமூர்த்தி’. இப்படிக் காணும் வழியெங்கும் ஞானக்கடவுளர்களின் தரிசனத்தைக் கண்டவாறே மலை உச்சியை அடைந்தால் ஒரு முகம், நான்கு திருக்கரங்கள் கொண்ட ஞான முருகப்பெருமான் வள்ளி, தேவசேனாவோடு காட்சியளிக்கிறார்.
பிரம்மனுக்கு வேத ரகசியம் சொன்ன வடிவம் இது என்பதால், இங்கு முருகப்பெருமான் குருவின் அம்சமாக ஞானத் திருவுருவாகக் காட்சியளிக்கிறார். இவரைத் தரிசிப்பவர்கள் அஞ்ஞானம் அழிந்து ஞான ஒளி பெற்று வாழ்வில் வளம் பெறுவார்கள் என்கிறது தல வரலாறு. திருக்கோயிலைச் சுற்றிவிட்டு இன்னும் மலையின் மீதேறிச் சென்றால் தேவசுனை, ஞானகிரீஸ்வரர் சந்நிதி, ஞானவெளி சித்தரின் ஜீவசமாதி, முருகப்பெருமானின் திருவடித் தடங்கள் என்று மலையெங்கும் அதிசயக் காட்சிகள் விரிந்துகிடக்கின்றன.

ஞானமலைக்கு வந்த அருணகிரிநாதருக்குத் திருவண்ணாமலை முருகப்பெருமானின் நினைவு வந்துவிட்டதாம். அங்கு இவரை ஆட்கொண்டு குருவாக நின்று தீட்சை தந்த பெருங்கருணையை எண்ணி கண்ணீர் மல்கிய அருணகிரிநாதர், ஞானமலையிலும் முருகப்பெருமானின் பாத தரிசன அனுபவத்தைப் பாடி தரிசித்தார்.
பல்லவர் காலத்து கோயில் என்று சொல்லப்படும் ஞானமலையில் 14-ம் நூற்றாண்டு காளிங்கராயன் காலத்துக் கல்வெட்டு ஒன்று கோயிலின் திருப்பணியை விவரிக்கிறது. வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் மகிழ்ந்து போற்றிய மாமலை இது. இன்றும் ஞானம் தேடி வரும் பக்தர்களுக்கு ஞான ஆசிரமமாக இந்த மலை விளங்கி வருகிறது.
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, வைகாசி விசாகம் என மாதம்தோறும் விழாக்களால் சிறப்புப் பெறும் இந்த அற்புத மலை கல்வி, கலைகளில்
சிறப்பான இடத்தைப் பெற விரும்பும் அன்பர்களுக்கு ஒரு சிறப்பான தலம் எனப்படுகிறது. ஞான குருவாக எழுந்தருளி வந்தவர்களுக்கு வரமளிக்கும் ஞானமலையில் வீற்றிருக்கும் ஞானப் பண்டிதனை ஒருமுறை சென்று தரிசித்துப் பாருங்கள்! மாயைகள் யாவும் நீங்கி மங்கள வாழ்வைப் பெறுவீர்கள் என்று அங்கு சென்று திரும்பிய எண்ணற்ற பக்தர்கள் சாட்சி சொல்கின்றனர்.
ஆறு அடி உயரமுள்ள ஞானவேலுக்கு விஷேஷ அபிஷேகம், சத்ருசம்ஹார திரிசக்தி அர்ச்சனை முதலியன சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குறமகள் தழுவிய குமரனின் பஞ்சலோக விக்ரகத்திற்கு விஷேஷ அலங்காரம் முதலியன செய்து கிரிவலம் வரும் விழா கார்த்திகையில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் திருப்புகழ்த் திருப்படி திருவிழாவும் ஏகதின லட்சார்த்தனை வைபவமும் மாதம் தோறும் பிரதோஷ வழிபாடும் நடைபெறுகின்றன.
இங்குள்ள குறமகள் தழுவிய குமரன் திருக்கோலத்தைத் தரிசித்தால் தம்பதிகளுக்கிடையே உருவான எல்லாச் சிக்கல்களும் நீங்கி ஒற்றுமை பிறக்கும் என்கிறார்கள். ஞானத்தின் முழுவடிவாகக் காட்சி தரும் வேலவனை ஞானமலையில் தரிசித்து அருள் பொறுவோம்.

















