வாஷிங்டன்/பெர்லின்: ஜெர்மனியின் ரூ.30.24 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம் தற்போது அமெரிக்காவில் பாதுகாப்பாக உள்ளது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்து வரும் சிக்கலான முடிவுகளால் இந்த தங்கம் தற்போது சர்வதேச விவாதத்திற்குரிய விஷயமாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் பாதுகாக்கப்படும் தங்கம்
ஜெர்மனியின் மத்திய வங்கியான பன்டேஸ்பேங்க் வசம் 3352 டன் தங்கம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 1100 டன் தங்கம், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கியின் சீக்ரெட் வால்டில் பாதுகாக்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை தாண்டும் எனக் கூறப்படுகிறது.
ஏன் அமெரிக்காவில் தங்கம்?
பனிப்போர் காலத்தில் சோவியத் யூனியனிடம் தங்கம் அபகரிக்கப்படும் என்ற பயத்தால் ஜெர்மனி தனது தங்கத்தை அமெரிக்காவிடம் பாதுகாப்பாக வைத்தது. இதுவே அந்நாட்டு உறவுக்கு ஒரு அடிப்படை பாயிண்டாக இருந்தது.
டிரம்ப் பரபரப்பு – நம்பிக்கையற்ற கூட்டாளர்?
தற்போது டிரம்ப் பெடரல் ரிசர்வ் வங்கியைக் கட்டுப்படுத்த முயல்கிறார் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அமெரிக்காவின் பொருளாதார தன்னாட்சியை கேள்விக்குள்ளாக்கும் நிலையில் உள்ளது. இதனால், ஜெர்மனியர்கள் அமெரிக்காவை நம்ப முடியாது எனக் கூறி தங்கள் தங்கத்தை உடனடியாக மீட்டுச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
வலது சாரி கட்சி கோரிக்கை
ஜெர்மனியில் உள்ள வலது சாரி அரசியல் கட்சி ‘ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி’ மற்றும் வரி செலுத்துவோர் கூட்டமைப்பும், தங்களின் தங்கத்தை அமெரிக்காவில் இருந்து உடனடியாக மீட்டுக் கொள்வதற்கான கடிதத்தை ஜெர்மனியின் நிதி அமைச்சகத்திற்கும் பன்டேஸ்பேங்கிற்கும் அனுப்பியுள்ளது.
“டிரம்ப்பை நம்ப முடியாது” – எம்பி மார்கஸ் ஃபெர்பர்
ஜெர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி எம்பி மார்கஸ் ஃபெர்பர் கூறியதாவது:
“டிரம்ப்பை நம்ப முடியாது. அவர் ஒருநாள் திடீரென்று வெளியூர் தங்கம் குறித்து வேறொரு முடிவெடுக்கலாம். எனவே, இது சாதாரண விஷயமல்ல.”
தங்கம் மீட்பு – அரசியல் தாக்கம் ஏற்படுத்துமா?
இந்நிலையில், ஜெர்மனி மத்திய வங்கி தற்போது தங்கத்தை மீட்டுப் பெற திட்டமில்லை என தெரிவித்துள்ளது. ஆனால், இவ்வாறு மீட்டுக் கொண்டால் அது அமெரிக்கா மீதான சர்வதேச நம்பிக்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் விமர்சகர்கள்.
ஜெர்மனி தங்கத்தை மீட்டுக்கொள்வதா? அல்லது டிரம்ப் அதன் மீது கண் வைக்கப் போகிறாரா? – என்ற எதிர்பார்ப்பில் உலக நாடுகளும், பொருளாதார வல்லுநர்களும் கண்காணித்து வருகின்றனர்.