காசா : இஸ்ரேலின் தொடர்ந்த இராணுவ நடவடிக்கைகளால் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 59,106-ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தேதியின்படி (22.07.2025) இந்த தரவுகளை ஹமாஸ் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறையும், ஊட்டச்சத்து இல்லாமையும் குழந்தைகள் உயிரிழப்புக்கு வழிவகுத்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் காசா முழுவதும் 21 குழந்தைகள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்துள்ளதாக அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் முகமது அபு சல்மியா தெரிவித்தார்.
2023 அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய போர், காசாவில் வாழும் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கையை நரகமாக மாற்றி விட்டது. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத நிலையில் மக்கள் துயரமடைந்துள்ளனர்.
மனிதாபிமான உதவிகளைப் பெறும் முயற்சிகளும் தடைகளை எதிர்கொண்டு வருகின்றன. உணவுப் பொருட்கள் கொண்டு வர முயன்ற பலரையும் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் கொன்றுவிட்டதாக ஐநா தீவிர கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இவ்விதமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
“ஒவ்வொரு நிமிடமும் ஒரு குழந்தை உயிரிழக்கிறது” எனத் தெரிவிக்கும் மருத்துவ நிபுணர்களின் வார்த்தைகள், நிலைமையின் கடுமையை தெளிவுபடுத்துகின்றன. இந்த சூழ்நிலையைப் பற்றி ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “பூமியில் நரகம் எங்கிருந்தால், அது காசாவில் வாழும் குழந்தைகளின் வாழ்க்கையே” எனக் கூறியிருந்தார். தற்போது அந்த நரக நிலை மேலும் தீவிரமாகியுள்ளதாக அவர் மீண்டும் தெரிவித்தார்.
போர் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளும் எந்த ஒரு முடிவையும் எட்டவில்லை. மக்கள் தஞ்சம் புகுந்த முகாம்கள் மற்றும் கூடாரங்களுமே இஸ்ரேலின் தாக்குதலுக்குள்ளாகின்றன.
தொடர்ச்சியான தாக்குதல்கள், நெருப்பு, புகை, புழுதி, சிதறிய மனித உடல்களுக்கிடையில் தங்களது குடும்பத்துடன் உயிர் தப்பிக்க போராடும் காட்சிகள் காசாவில் அன்றாடம் நிகழ்கின்றன. கடந்த 9 மாதங்களாக இந்தக் கோரநிலையை மக்கள் தாங்கி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை.