ஜி.கே.மணி பா.ம.க சட்டமன்ற குழுத் தலைவராக இருந்து நீக்கம் ; வெங்கடேசன் புதிய தலைவர்

தமிழக சட்டப்பேரவையில் பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த ஜி.கே.மணி தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்குப் பதிலாக, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் புதிய சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான தகவலை பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், வெங்கடேசன், சதாசிவம் சட்டப்பேரவைச் செயலரிடம் கடிதம் மூலம் அறிவித்துள்ளனர். கடிதத்தில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜி.கே.மணியை தலைவரிடமிருந்து விடுவித்து, வெங்கடேசனை புதிய தலைவராக நியமிக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பா.ம.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, “சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள் கட்சியிலிருந்து மற்றும் கொறடா பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். மயிலும் சிவகுமாரை புதிய கொறடாவாக சட்டப்பேரவை ஆவணங்களில் பதிவு செய்ய கடிதம் அனுப்பி உள்ளோம். விரைவில் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்,” என்று தெரிவித்தார்.

ஜி.கே.மணி நீக்கம் தொடர்பாக அவர், “ஜி.கே.மணி இருபது ஆண்டுகளுக்கு மேல் சட்டமன்றத்தில் இருந்தவர். சமீபத்தில் அவர் தொடர்பாக வெளியான செய்திகள் வருத்தமளிக்கின்றன. இது கட்சியின் அடிப்படை விதிகளுக்கு விரோதமாகும்,” என்றும் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தை முன்னிட்டு, புதிய தலைவரின் நியமனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version