விஜய்யின் கார் முதல் பிரச்சார பஸ் வரை ஒரே நம்பர் பிளேட் – பாசம் கலந்த சென்டிமென்ட் !

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தனது கார்கள் முதல் பிரச்சார பேருந்து வரை ஒரே மாதிரியான பதிவு எண்களை பயன்படுத்தி வருகிறார். இதற்குப் பின்னால் அவர் கொண்டுள்ள தனிப்பட்ட சென்டிமென்ட் காரணமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனாலும், தனது உச்ச நிலையைத் தாண்டியும் அரசியல் கட்சியைத் தொடங்கியதன் காரணம் “சமூகத்திற்கு திருப்பித் தர வேண்டும்” என்ற எண்ணமே என அவர் விக்கிரவாண்டியில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய், வரவிருக்கும் 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தற்போது தமிழகமெங்கும் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்தப் பிரச்சாரப் பயணத்தில் அவர் பயன்படுத்தும் வாகனங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. விஜய்யின் சொகுசு கார் சேகரிப்பில் ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ இவி, லெக்சஸ் எல்.எம், டொயோட்டா உள்ளிட்ட வாகனங்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய சிறப்பாக ஒரு பேருந்தையும் அவர் வாங்கியுள்ளார்.

ஆனால் இவை அனைத்துக்கும் ஒரு பொதுவான அம்சம் உள்ளது – அனைத்து வாகனங்களிலும் “0277” என்ற எண் தவறாமல் இடம்பெற்றுள்ளது. உதாரணமாக, TN 14 AH 0277, TN 14 AL 0277, TN 14 AM 0277 ஆகியன அவரது கார்களின் பதிவு எண்களாகும். அதேபோல், பிரச்சார பேருந்தின் எண் TN 14 AS 0277 என குறிப்பிடப்படுகிறது.

இதற்குக் காரணம், 14-02-77 என்ற தேதியுடன் விஜய்யின் வாழ்க்கையில் இணைந்திருக்கும் சென்டிமென்ட். அந்த நாளில்தான் விஜய்யின் தங்கை வித்யா பிறந்ததாக கூறப்படுகிறது. தங்கையிடம் கொண்ட அன்பின் அடையாளமாகவே தனது வாகன எண்களில் இதைச் சேர்த்துள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவே அவரது மகளுக்கு “வித்யா”விலிருந்து “திவ்யா” என்ற பெயரைத் தேர்ந்தெடுக்கச் செய்த காரணம் என்றும் கூறப்படுகிறது.

எனவே, விஜய் பயன்படுத்தும் கார் முதல் பிரச்சார பஸ் வரை ஒரே மாதிரி எண் பிளேட் இருப்பது, ஒரு சாதாரண விருப்பம் அல்ல – அவரின் குடும்ப பாசம் கலந்த சென்டிமென்ட் என்பதே உண்மை.

Exit mobile version