கோவை மாநகரம் குனியமுத்தூர் பகுதியில் அரங்கேறிய 103 சவரன் தங்க நகை கொள்ளை வழக்கில், கள்ளச்சாவி மூலம் வீடுகளைத் திறந்து கைவரிசை காட்டி வந்த 48 வயது மர்ம ஆசாமியை மாநகரப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பிடிபட்ட நபர் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பழைய குற்றவாளி என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கோவை குனியமுத்தூர், நரசிம்மபுரம் ஸ்ரீ ஐயப்பா நகரில் வசித்து வருபவர் ஜெபா மார்ட்டின். தனியார் பள்ளி ஆசிரியரான இவர், கடந்த கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறையைக் கொண்டாடுவதற்காகத் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்படாமல் அப்படியே இருக்க, உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 103 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10,000 ரொக்கம் மர்மமான முறையில் திருடு போயிருப்பதைக் கண்டு உறைந்து போனார்.
தகவலறிந்த குனியமுத்தூர் போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிட்டனர். வீட்டின் பூட்டுகள் உடைக்கப்படாததால், முதலில் உறவினர்கள் மீது சந்தேகம் திரும்பியது. ஆனால், மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், அந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான சிசிடிவி (CCTV) காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய கண்ணப்ப நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (48) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, கொள்ளை குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
ராமநாதபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணமூர்த்தி, கோவையில் கார் டிரைவராகப் பணியாற்றி கொண்டே இரவு நேரங்களில் கைவரிசை காட்டி வந்துள்ளார். இவர் தனது கைவசம் நூற்றுக்கணக்கான சாவிகளைக் கொத்தாக வைத்திருப்பார். பூட்டியிருக்கும் வீடுகளைக் கண்டறிந்தால், ஒவ்வொரு சாவியாகப் போட்டுப் பார்த்துத் திறப்பதில் இவர் கைதேர்ந்தவர். சாவிகள் பொருந்தாத பட்சத்தில், ரம்பங்களைக் கொண்டு சாவியின் அமைப்பைச் சரிசெய்து கதவைத் திறக்கும் வினோத நுட்பத்தைக் கையாண்டுள்ளார். 1993-லேயே மும்பைக்குச் சென்று கொலை வழக்கில் கைதான இவர், 2003 முதல் கோவையில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர். கடந்த 2023-இல் சரவணம்பட்டி பகுதியிலும் இதே கள்ளச்சாவி பாணியில் இவர் திருடியது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து தற்போது 80 சவரன் தங்க நகைகள் மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சில நகைகளை அவர் அடகு வைத்துள்ளதாகவும், சிலவற்றை வேறு நபர்களிடம் விற்றுள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். வீடு உடைக்கப்படாமல் திருடப்படுவதால் மக்கள் குழப்பமடைவதையே தனது சாதகமாகப் பயன்படுத்தி வந்துள்ளார் இம்மாபெரும் திருடன். இவரைக் கைது செய்த தனிப்படை போலீசாரை மாநகரக் காவல் துறை வெகுவாகப் பாராட்டியுள்ளது.

















