பாரீஸ் : பிரான்ஸ் அதிபராக இம்மானுவேல் மேக்ரோன் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 2024 ஜூன் மாதம் பார்லியை கலைத்து விட்டு புதிய தேர்தலை நடத்த உத்தரவிட்டார். அதன்படி உருவான புதிய பார்லியில் முதலில் கேப்ரியல் அட்டல் பிரதமராக பதவி வகித்தார். ஆனால், அவர் 2024 செப்டம்பரில் ராஜினாமா செய்ததால், மைக்கேல் பார்னியர் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததால் பார்னியர் பதவி நீடிக்க முடியவில்லை. இதையடுத்து மூன்றாவது பிரதமராக பிராங்காய்ஸ் பாய்ரு கடந்த 9 மாதங்களுக்கு முன் பதவி ஏற்றார்.
இந்நிலையில், அரசின் செலவுகளை சிக்கனமாக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டுக்கு ஆதரவு கோரி, நம்பிக்கை ஓட்டுக்கு பாய்ரு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவருக்கு வெற்றி கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் பார்லியில் மொத்தம் 577 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 320 பேர் அரசுக்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளனர். ஆதரவாக உள்ளோர் எண்ணிக்கை 210 மட்டுமே. இதனால், பாய்ருவின் அரசு கவிழும் அபாயம் அதிகரித்துள்ளது.
நம்பிக்கை ஓட்டெடுப்பில் பெரும்பான்மையானோர் ஆதரவு தராவிட்டால் அரசு விழுந்துவிடும். அப்படி நடந்தால் பிரான்ஸ் அரசியலில் பெரும் குழப்பம் உருவாகும் நிலையில், புதிய பிரதமரை தேர்ந்தெடுத்து பதவியேற்கச் செய்ய வேண்டிய சவாலை அதிபர் மேக்ரோன் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
“எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், சில அரசியல் குழுக்கள் கூட ஒன்றிணைந்து எனக்கு எதிராக செயல்படுகின்றன” என விரக்தியுடன் பிரதமர் பாய்ரு தெரிவித்துள்ளார்.