சென்னை :
சென்னையில் நடைபெற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் மேடையில் கலங்கி பேசிய மாணவிக்கு, இலவச வீடு வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆலங்குளம் அருகே வசிக்கும் பிரேமா என்ற மாணவி, நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, தன் தந்தை கழுநீர் குளத்தில் ஒழுகும் வீட்டில் வசிப்பதாக கண்ணீருடன் கூறியிருந்தார். அந்த உணர்ச்சி பூர்வமான உரை அனைவரையும் பாதித்தது.
இதையடுத்து, 24 மணி நேரத்துக்குள் முதல்வர் ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்து, ‘கருணாநிதி கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், மாணவியின் குடும்பத்திற்கு புதிய வீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் இதுகுறித்து பதிவு செய்த அவர், “ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை இனி பிரேமாவுக்கு வேண்டாம். தனது மகளின் கல்விக்காக பல சிரமங்களையும் எதிர்கொண்ட தந்தைக்கு, புதிய வீடு வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சி,” என குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் உணர்ச்சிபூர்வ உரை, அதற்கு வந்த அரசின் விரைவான பதில் ஆகியவை சமூக வலைதளங்களில் பரவலாக பாராட்டப்படுகின்றன.