அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதாட்டத்தில் காளைகள் முட்டியதில் பெண் உட்பட 4 பேர் பலி.

சேலம் மாவட்டத்தில் காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட எருதாட்ட நிகழ்ச்சிகளில், காளைகள் முட்டியதில் பெண் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக நடத்தப்படும் இந்த எருதாட்ட நிகழ்வுகளில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததாலும், சில இடங்களில் அனுமதியின்றி போட்டிகள் நடத்தப்பட்டதாலும் இந்த உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன. குறிப்பாக எடப்பாடி அருகே கொங்கணாபுரம் புதுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அய்யனாரப்பன் கோயிலில், நிர்வாகத் தரப்பினரிடையே நிலவிய மோதல் காரணமாக எருதாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தடையை மீறி 20-க்கும் மேற்பட்ட காளைகளுடன் வீரர்கள் களமிறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும் வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், காளைகள் சீறியதில் போலீசார் உட்பட 5 பேர் காயமடைந்தனர். ஒரு காளை இருசக்கர வாகனத்தைத் தூக்கி வீசியதில் அப்பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

கெங்கவல்லி அடுத்த செந்தாரப்பட்டி மாரியம்மன் கோயில் திடலில் நடைபெற்ற எருதாட்டத்தின் போது, பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த எல்லையைத் தாண்டி காளை ஒன்று பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் 23 வயதான சக்திவேல் என்ற இளைஞரைத் தூக்கி வீசி காளை பலமாக முட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல் தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி பகுதியில் நடைபெற்ற போட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வினிதா (30) என்ற பெண் மீது காளை பாய்ந்ததில், அவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி பலியானார். இது தொடர்பாகத் தம்மம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் மற்றுமொரு துயர சம்பவமாக, கீரிப்பட்டி பகுதியில் எருதாட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த 65 வயதான பெரியசாமி என்பவரை காளை கழுத்தில் குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். மேச்சேரி அருகே புக்கம்பட்டி மாரியம்மன் கோயில் எருதாட்டத்தில், கடைசியாக வந்த காளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராஜ்குமார் (58) என்பவரின் வயிற்றுப் பகுதியில் கொம்பால் குத்தியது. பலத்த காயமடைந்த அவரைச் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அனுமதியின்றி எருதாட்டம் நடத்தியது மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறியது தொடர்பாக மல்லியக்கரை மற்றும் மேச்சேரி போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சேலம் மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version