திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று நிகழ்ந்த பயங்கர தொடர் வாகன விபத்தில் 15-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். விராலிமலையில் உள்ள பிரபல வாகன உற்பத்தி தொழிற்சாலையில் இரவு நேரப் பணியை முடித்துவிட்டு, தொழிலாளர்கள் அதிகாலையில் வேன் மற்றும் பேருந்து மூலம் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். தேத்தாம்பட்டி பிரிவு அருகே வாகனங்கள் சென்றபோது, சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று பாய்ந்ததால், முன்னால் சென்ற கார் ஓட்டுநர் நிலைகுலைந்து பிரேக் பிடித்துள்ளார். இதன் காரணமாகப் பின்னால் அதிவேகமாக வந்த லாரி காரின் மீது மோதியதுடன், பின்னால் வந்த தொழிற்சாலை வேன் மற்றும் பேருந்து ஆகியவை சங்கிலித் தொடர் போல ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த தொழிலாளர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். அந்த நேரத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் போதிய மருத்துவர்கள் இல்லாத சூழலைக் கவனித்த அவர், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் தனது அரசியல் அடையாளங்களை விடுத்து, ஒரு மருத்துவராகக் களத்தில் இறங்கினார். வலியில் துடித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் காயங்களைச் சுத்தம் செய்ததோடு, அவர்களுக்குத் தையல் போடுவது மற்றும் முதலுதவி சிகிச்சைகளைத் தனது கைகளாலேயே மேற்கொண்டார். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிலரை மேல் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கத் தனிப்பட்ட முறையில் ஏற்பாடுகளைச் செய்ததுடன், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறித் தேற்றினார்.
முன்னாள் அமைச்சர் ஒருவர் மருத்துவமனையில் நோயாளிகளுக்குக் கட்டுப்போட்டு சிகிச்சை அளிக்கும் இந்த நெகிழ்ச்சியான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனது மருத்துவப் பணியைத் தர்மமாகச் செய்யும் குணமே உண்மையான மக்கள் சேவை” என அங்கிருந்த பொதுமக்களும், சமூக வலைதளவாசிகளும் அவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் மற்றும் விலங்குகளால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கக் கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















