கோபிசெட்டிபாளையம்: முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சென்னைக்கு சென்றது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையம் வீடு திரும்பிய அவர், “நான் யாரையும் சந்திக்கவில்லை. என் மனைவி சிகிச்சை பெற்று வருகிறார், அவரை பார்ப்பதற்காகவே சென்னைக்கு சென்றேன். அங்கே என்னுடைய சொந்த வேலைகளை பார்த்துவிட்டு இன்று வீடு திரும்பியிருக்கிறேன்” என கூறினார்.
அவரைச் சந்தித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த செங்கோட்டையன், “சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை. தவறான செய்திகள் வந்தவுடன் அதை தொலைக்காட்சிகள் மூலம் நான் தெளிவுபடுத்தியுள்ளேன்” என்றார்.
அதே நேரத்தில், “என்னைப் பொறுத்தவரையில் குறிக்கோள் ஒன்றுதான். அதாவது, இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது நோக்கம். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கனவு கண்டது போல, இந்த இயக்கம் 100 ஆண்டுகள் நிலைத்திருக்க வேண்டும். அதற்காகவே தொண்டர்கள் தியாகம் செய்து வருகின்றனர்” என வலியுறுத்தினார்.
மேலும், “கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பல நண்பர்கள் என்னிடத்தில் பேசி வருகின்றனர். ஒருமித்த கருத்துகள் அவர்களிடம் உள்ளது. யார் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ், அதை இப்போது வெளியிட முடியாது. ஆனால் எல்லோருடைய உள்ளங்களிலும் ஒரே குறிக்கோள் தான் உள்ளது” என்று கூறினார்.