விளம்பரம் பிரச்சினை… எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலீசாரிடம் வாக்குவாதம்

கரூரில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகையை முன்னிட்டு சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக பிரச்சினை – சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலீசாரிடம் வாக்குவாதம்.

வருகின்ற 25 மற்றும் 26 தேதிகளில் எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கரூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வேலாயுதம்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தில் சுவர் விளம்பரம் செய்ய முற்பட்டனர். அப்போது, திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு வந்த போலீசார் 17ம் தேதி முதல்வர் வருகையை முன்னிட்டு திமுக சார்பில் விளம்ரம் செய்யப்படுவதால் நிகழ்ச்சி முடிந்த பிறகு 18ம் தேதிக்கு மேல் சுவர் விளம்பரம் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி அதிமுகவினரை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் ஏற்கனவே திமுக சார்பில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தை வெள்ளை நிற பெயிண்டை வைத்து அழித்து விட்டு புதிதாக அதிமுக சார்பில் விளம்பரம் செய்ய முற்பட்டனர். அதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டனர். அப்போது, அங்கு வந்த போலீசார் அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முன்னாள் அமைச்சருக்கும், கரூர் நகர காவல் நிலைய போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட போவதாக கூறி விட்டு புறப்பட்டுச் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவிற்காக திமுகவினர் அனைத்து அரசு சுவர்கள், பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் விளம்பரம் எழுதிக் கொண்டு, அதிமுக விளம்பரங்களை எழுத விடாமல் இடையூறு செய்வதாகவும், அரசு சுவர்கள் என்ன திமுகவிற்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா? எங்களை மட்டும் அனுமதி பெற்று எழுதிக் கொள்ளும்படி போலீசார் அறிவுறுத்துகின்றனர், திமுகவினர் அனுமதி பெற்று தான் அவர்கள் சுவர் விளம்பரம் எழுதினார்களா என கேள்வி எழுப்பினார்.

வரும் 25, 26 தேதிகளில் எடப்பாடியார் கரூர் வரும் போது பேச இருக்கும் இடத்திற்கு அனுமதி அளிக்காமல் காவல் துறையினர் இழுத்தடித்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும், அதனை விசாரித்த நீதிபதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து அனுமதி பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version