தமிழகத்தில் அதிகாரிகள் ஆட்சி நடக்கிறது : முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு

சென்னை : தமிழகத்தில் தற்போது அதிகாரிகள் ஆட்சி நடைபெறுகிறது என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களாட்சி நடைமுறையில் இருந்தால், அமைச்சர்களே மக்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். ஆனால், தற்போது அதிகாரிகளே பதிலளிக்கின்றனர். இதுவே அதிகாரிகள் ஆட்சி எனும் உண்மையை வெளிக்காட்டுகிறது,” என்றார்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் மத்தியில் சென்று மனுக்கள் பெற்றதாகவும், அவை குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையும் அவர் நினைவுபடுத்தினார். “அந்த மனுக்களில் எத்தனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதன் விபரம் எங்கு உள்ளது?” என்றார்.

மேலும், “மக்கள் நேரடியாக கோட்டையில் முதல்வரைச் சந்திக்கலாம் எனக் கூறியிருந்தார். ஆனால், யாருக்கும் சந்திக்க முடியவில்லை. தேர்தல் நெருங்குவதால், புதிய திட்டங்களுக்கு புதிய பெயர்கள் வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மனுக்களுக்கு தீர்வு இல்லை,” என்றார்.

பொதுத்துறை நிர்வாகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை செய்தி தொடர்பு பொறுப்பாளர்களாக நியமித்ததை விமர்சித்த ஜெயகுமார், “இப்படியெல்லாம் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றால், தமிழகத்தில் ‘செய்தி மக்கள் தொடர்புத் துறை’ எதற்கு?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “எமர்ஜென்சி காலத்தில் மட்டுமே அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திப்பார்கள். ஆனால் இப்போது பி.ஆர்.ஓ. பணிக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்து, அவர்களது பதவியை அவமதித்து விட்டார்,” என்றார்.

பள்ளிக்கல்வித்துறையையும் கடுமையாக விமர்சித்த அவர், “68,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. வகுப்பறைகள், கழிப்பறைகள், அடிப்படை வசதிகள் இல்லை. இவ்வாறான சூழலில் ‘ப’ வடிவில் மாணவர்களை அமர்த்தினால், அது கல்விக்கே பேரழிவு,” எனக் கூறினார்.

கல்வித்துறை அமைச்சரை நீக்கி, வேறு நபரை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட ஜெயகுமார், “இந்தத் துறையை இனியும் நாசமாக்க விடக்கூடாது,” என்றார்.

Exit mobile version