சென்னை: கோவை சிங்காநல்லூர் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சின்னசாமி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அவரது இந்த கட்சிமாற்றம் அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
சிங்காநல்லூர் தொகுதியில் 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இருமுறை எம்.எல்.ஏ.வாக தேர்வான சின்னசாமி, முதலில் ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் முக்கிய தலைவராக அறியப்பட்டவர். 2006 தேர்தலின் போது தொழிற்சங்கத்தில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, அவர் தலைமையிலான அணியினர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தனர். அப்போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார். பின்னர் அவர் அதிமுகவில் இணைந்தார்.
2016 தேர்தலில் திமுக வேட்பாளர் கார்த்திக்கிடம் சின்னசாமி தோல்வி அடைந்தார். பின்னர் அதிமுக தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்தபோது ரூ.8 கோடி கையாடல் விவகாரம் தொடர்பாக கோவை மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியில் இருந்து நீக்கியார். நீக்க முடிவை எதிர்த்து சின்னசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதன்போது ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரையும் அவர் வெளிப்படையாக விமர்சித்தார்.
பின்னர் அவர் டிடிவி தினகரன் தலைமையிலான அணியில் இணைந்தார். அதன்பின் மீண்டும் பிப்ரவரி 2024ல் பாஜகவில் சேர்ந்த அவர், சில மாதங்களில் அதிமுகவிற்குத் திரும்பினார். ஆனால் தொடர்ந்த அதிருப்தி காரணமாக, அவர் மீண்டும் கட்சிமாற்ற முடிவை எடுத்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் அதிமுகவில் இருந்து பல முக்கிய பிரமுகர்கள் வெளியேறி திமுகவில் இணைவது அரசியல் சூழலை சூடு பிடிக்கச் செய்துள்ளது. அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் உள்ளிட்ட பலர் திமுகவிற்கு மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கோவை சிங்காநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமியின் திமுக சேர்க்கை, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் மாற்றங்களுக்கு மேலும் வண்ணம் பூசும் வகையில் அமைந்துள்ளது.
















