தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பண்ணை வீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக அனைவரும் ஒன்றிணைய நான் தயாராக இருக்கிறேன். டிடிவி தினகரனும், என்னுடைய அருமை அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியும் இதற்கு தயாரா? என்பதை அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், கூட்டணி தொடர்பாக தன்னுடைய நிலைப்பாடு குறித்து யூகங்களின் அடிப்படையில் வதந்திகள் பரப்புவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்றும், அதுவே ஜனநாயகத்திற்கு அழகு என்றும் தெரிவித்தார். தற்போது அதிமுக தொண்டர்களின் உரிமைகளை மீட்கும் நோக்கில் “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்” என்ற அமைப்பு சட்டப் போராட்டம் நடத்தி வருவதாகவும் கூறினார்.
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டது, தங்களிடம் தொண்டர்கள் உள்ளனரா என்பதை நிரூபிப்பதற்காகத்தான் என்றும், அப்போது பல்வேறு இடையூறுகள் செய்யப்பட்டதை அனைவரும் அறிவார்கள் என்றும் ஓபிஎஸ் குறிப்பிட்டார். தொண்டர்களும் மக்களும் தன் பக்கம் இல்லை என்ற செயற்கையான சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தொண்டர்களின் உரிமையை காக்க வேண்டும் என்பதே தங்களின் அடிப்படை நோக்கம் என்றும், அதற்காகத்தான் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்த அவர், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே தன்னுடைய இறுதி இலக்கு; தனிப்பட்ட அரசியல் வெற்றிக்காக புதிய கட்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) வெற்றி பெற்று, அதிமுக தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என்றும் ஓபிஎஸ் கூறினார்.
இந்த நிலையில், அரசியல் ரீதியாக குறிப்பிடத்தக்க விஷயமாக, ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே அதிமுக கட்சியிலிருந்து இடைக்காலமாக நீக்கப்பட்டவர் என்பதும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக்கப்பட்டவர் என்பதும் அரசியல் வட்டாரங்களில் நினைவூட்டப்படுகிறது. தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி செயல்பட்டு வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள், அதிமுக தொடர்பான இறுதி அரசியல் முடிவுகளை எடப்பாடி பழனிச்சாமியே அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், அதிமுக–என்.டி.ஏ கூட்டணியின் எதிர்கால அரசியல் திசை, எடப்பாடி பழனிச்சாமியின் முடிவுகளை மையமாகக் கொண்டே அமையும் என்ற சூழல் நிலவுவதாகவும், ஓபிஎஸின் இந்த கருத்துகள் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

















