தேசவிரோத நடவடிக்கைகள் மற்றும் கடுமையான குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கு இந்தியாவில் நுழையவோ, தங்கவோ அனுமதி மறுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025 (Immigration and Foreigners Act, 2025) படி, உளவு பார்த்தல், பாலியல் வன்கொடுமை, கொலை, பயங்கரவாதச் செயல்கள், குழந்தை கடத்தல், போதைப்பொருள் கடத்தல், சைபர் குற்றம், போலி நாணயம் பயன்படுத்துதல் மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராக இருப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கு இந்தியா நுழைவு தடை செய்யப்படும்.
அதேபோல், ஏற்கனவே இந்தியாவில் வசித்து வந்தால், நாடு கடத்தப்படும் வரை அவர்கள் தடுப்பு மையங்களில் வைக்கப்படுவார்கள் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், இதற்கென சிறப்பு தடுப்பு முகாம்களை அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா நுழையவோ அல்லது இந்திய வெளிநாட்டு குடிமகனாக பதிவு செய்யவோ விண்ணப்பிக்கும் ஒவ்வொருவரும், கட்டாயம் பயோமெட்ரிக் தரவை சமர்ப்பிக்க வேண்டும். சட்டவிரோதமாக இந்தியாவில் நுழையும் நபர்கள், நாடு கடத்தப்படும் வரை அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முக்கிய துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு விசா கொண்டவர்கள், சிவில் அதிகாரிகளின் அனுமதியின்றி தனியார் மின்சாரம், நீர் மற்றும் பெட்ரோலியத் துறைகளில் பணிபுரிய முடியாது. அதேபோல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லது வெப் கன்டென்ட் தயாரிக்க மத்திய அரசின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அவசியம். மலையேற்றப் பயணங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தங்குவது, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, ஜம்மு–காஷ்மீரின் சில பகுதிகளுக்குச் செல்லுவது போன்றவை சிறப்பு அனுமதி இல்லாமல் சாத்தியமில்லை.
ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்கள் குறிப்பிட்ட பாதுகாப்புப் பகுதிகளுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினரின் நுழைவு தடைப்பட்ட புதுப்பிக்கப்பட்ட பட்டியலை குடிவரவு பணியகம் பராமரிக்கும் என்றும், நீதிமன்ற உத்தரவு, உடல்நலப் பிரச்சினைகள், ராஜதந்திர காரணங்கள் போன்ற விசேஷ சூழ்நிலைகளுக்கான பட்டியலும் தனியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.