சென்னை: தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் அவர் பேசியதாவது :
“பீஹாரில் சிறப்பு வாக்காளர் திருத்தம் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு எதிராகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இத்தகைய நிலை தமிழகத்தில் உருவாகாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாளை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார காலம் பயணம் செல்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஈர்த்துள்ளோம். வெளிநாட்டு பயணங்களில், தமிழகத்தில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் மனப்பூர்வமாக ஆர்வம் காட்டுவதை நேரில் பார்த்துள்ளேன்.
தற்போதைய வெளிநாட்டு பயண விவரங்களை நாளை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் விரிவாக விளக்குவேன்,” என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.