கர்நாடகா : சிராவர் தாலுகா கடோனி திம்மாபூர் கிராமத்தில் உணவில் விஷம் கலந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, இரு குழந்தைகள் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.
38 வயதான ரமேஷ் மற்றும் அவரது மனைவி பத்மா (35) தங்கள் நால்வர் மகள்களுடன் வாழ்ந்து வந்தனர். ரமேஷ், தனது தோட்டத்தில் காய்கறி பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், அதே தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட காய்கறிகள் வீட்டு உபயோகத்துக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, சப்பாத்தி, சாதம், சாம்பார் மற்றும் கொத்தவரங்காய் பொறியல் தயாரித்து குடும்பத்தினர் இரவு உணவு அருந்தினர். சில நேரத்திலேயே அனைவருக்கும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆறு பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துமனையில் செல்லும் வழியில், இளைய மகள் தீபா (6) உயிரிழந்தார். பின்னர், ரமேஷ் மற்றும் மகள் நாகம்மா (8) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பத்மா, கிருஷ்ணா (12), சைத்ரா (10) ஆகிய மூவரும் ராய்ச்சூர் ரிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உணவில் விஷம் கலந்ததா அல்லது பூச்சிக்கொல்லி கலந்த காய்கறிகள் காரணமாக விஷமடைந்ததா என்ற கோணத்தில், மருத்துவர்கள் மற்றும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது ஒரு விபத்தா அல்லது திட்டமிட்ட தற்கொலை முயற்சியா என்பது குறித்தும் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.