புனிதமான ராமேஸ்வரம் தீவையும் நிலப்பரப்பையும் இணைக்கும் பாம்பன் பாலத்தில் இருந்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் தங்களின் பழைய துணிகளைக் கடலில் வீசி எறிவது, கடல் சுற்றுச்சூழல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தற்போது சபரிமலை சீசன் தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். பின்னர் சொந்த ஊர் திரும்பும்போது, தங்களின் பாவங்கள் நீங்குவதாகக் கருதி, கருப்பு மற்றும் காவி நிற வேட்டிகள், துண்டுகள் உள்ளிட்ட பழைய துணிகளைப் பாம்பன் பாலத்தின் மீதிருந்து கடலில் வீசிச் செல்கின்றனர்.
இவ்வாறு வீசப்படும் துணிகள் கடலில் அங்கங்கே தீவுகள் போல மிதக்கின்றன. இதனால் பாம்பன் கடற்பகுதியில் வாழும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள், குறிப்பாகக் கடல் பசுக்கள், டால்பின்கள் மற்றும் ஆமைகள் இந்தத் துணிகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கடல் அடியில் உள்ள பவளப்பாறைகளின் மீது இந்தத் துணிகள் படிவதால், மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு, மீன் வளம் குறையும் நிலையும் உருவாகியுள்ளது. ஆன்மீக நம்பிக்கை என்ற பெயரில் செய்யப்படும் இச்செயல், இயற்கைக்கு எதிராக முடிவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடல் உயிரினங்களுக்கு மட்டுமின்றி, அன்றாடம் கடலை நம்பி வாழும் மீனவர்களுக்கும் இது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளின் என்ஜின் விசிறிகளில் (Propeller) இந்தத் துணிகள் சுற்றிக் கொள்வதால், நடுக்கடலில் படகுகள் பழுதாகி மீனவர்கள் தவிக்கும் சூழல் ஏற்படுகிறது. இது குறித்து வேதனை தெரிவிக்கும் மீனவர்கள், “துணிகள் சிக்கிப் படகுகள் சேதமடைவதால் ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது; பாவத்தைப் போக்க நினைப்பவர்கள், மற்றவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் துணிகளைக் கடலில் எறிய வேண்டாம்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய நிலையைச் சீரமைக்க, பாம்பன் பாலம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்றும், கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்தித் துணி வீசுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இயற்கை எழில் கொஞ்சும் பாம்பன் கடல் பகுதியைத் துணிக் கழிவுகளிலிருந்து காக்க, பக்தர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

















