இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார் தமிழர் வருண் சக்கரவர்த்தி. ஐசிசி வெளியிட்ட புதிய டி20 தரவரிசையில், உலக நம்பர் 1 பவுலராக உயர்ந்துள்ளார்.
26 வயதில் கிரிக்கெட்டை கனவாக எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கிய வருண், 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அதிக வயதில் அறிமுகம் பெற்ற வீரராக இருந்தாலும், தனது திறமையால் விரைவிலேயே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
2025 சாம்பியன்ஸ் டிரோபியில் இந்தியா வெற்றிபெற முக்கிய பங்கு வகித்தவர் தற்போது ஆசியக் கோப்பையிலும் அதே வேகத்தில் விளையாடி வருகிறார். சமீபத்திய ஆட்டங்களில் யுஏஇ மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக விக்கெட்டுகளை கைப்பற்றி, டி20 பவுலர்கள் பட்டியலில் 3 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார்.
இதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா, ரவி பிஸ்னோய் ஆகியோருக்குப் பிறகு உலக நம்பர் 1 டி20 பவுலராக உயர்ந்த மூன்றாவது இந்தியராகும் சாதனையை படைத்துள்ளார்.
இதற்கிடையில், ஒருநாள் பவுலர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் 16 இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
