ஈரோடு மாவட்டம் பர்கூரில் உள்ள பந்தீஸ்வரர் கோயிலில் நடைபெறும் மகா குண்டம் விழாவில், முதல் மரியாதை வழங்க வேண்டும் எனக் கோரி தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், “கோவில் மரபுப்படி, எங்கள் குடும்பத்தினர் தலைமையில் சுவாமி ஊர்வலம் நடைபெறும். எனவே, எங்கள் குடும்பத்திற்கு முதல் மரியாதை வழங்கவேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதி கூறியதாவது :
பல கோயில்களில் நடைபெறும் விழாக்களில், முதல் மரியாதையை யாருக்கு வழங்குவது என்ற கேள்வியே பெரும்பாலும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகளுக்குக் காரணமாகிறது. கடவுளைப் போற்றும் விழாக்களில், மனிதர்கள் தங்களை கடவுளைவிட உயர்வாக காட்ட முயற்சிப்பது ஏற்க முடியாதது. இது சமத்துவத்தையும், விழாக்களின் உண்மையான நோக்கத்தையும் பாதிக்கிறது. கடவுள் முன் அனைவரும் சமம் என்பதே இந்த நாட்டின் அடிப்படை கொள்கை.
அதனால், கோயில்களில் ‘முதல் மரியாதை’ என்ற நடைமுறையை நிறுத்த வேண்டும் என்ற உத்தரவை நீதிபதி வெளியிட்டார். மேலும், தேவராஜ் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து வழக்கை முடித்து வைத்தார்.