கரூர் சம்பவத்துக்குப் பின் முதல் பொதுக்கூட்டம் : ஈரோட்டில் குவிந்த தொண்டர்கள்

ஈரோடு:
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பொதுவெளியில் பங்கேற்கும் முதல் பிரசார கூட்டமாக ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்திற்காக அதிகாலையிலிருந்தே தொண்டர்கள் திரளாக குவியத் தொடங்கியுள்ளனர்.

ஈரோடு மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகை தந்துள்ளனர். விஜய்யை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், முன் வரிசைகளில் இடம்பிடிக்க தொண்டர்கள் முனைந்ததால் கூட்டம் தொடங்கும் முன்பே பரபரப்பான சூழல் காணப்பட்டது.

இந்த பொதுக்கூட்டத்திற்காக 16 ஏக்கர் பரப்பளவில் மேடை மற்றும் பார்வையாளர் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 60 ஏக்கர் பரப்பில் கார்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கும், 20 ஏக்கரில் இருசக்கர வாகனங்களுக்கும் தனித்தனியாக வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்கும் மக்களுக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். உணவு வழங்கும் ஏற்பாடு இல்லை என்றும் அவர் கூறினார். பொதுக்கூட்ட மைதானம் முழுவதும் 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிக்காக சுமார் 1,500 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கூட்டம் நடைபெறும் பகுதிகளிலும், விஜயமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் உள்ள 8 டாஸ்மாக் மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் மக்கள் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று காலை 8 மணியளவில் சென்னை நீலாங்கரை இல்லத்திலிருந்து புறப்பட்டார். அவர் காரில் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் சென்றார். பின்னர் சாலை வழியாக ஈரோடு விஜயமங்கலம் பொதுக்கூட்ட மைதானத்திற்கு வருகை தர உள்ளார். பிரசார வாகனத்தில் நின்றபடியே அவர் தொண்டர்களை நோக்கி உரையாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நேரம் செல்ல செல்ல கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஈரோடு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version