ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் உள்ள ஓடத்துறை கிராமத்தில், சுமார் 76 ஆண்டுகால கல்விப் பாரம்பரியம் கொண்ட சோமசுந்தரம் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அதிநவீன மூன்று தள புதிய கட்டடத் திறப்பு விழா உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. கடந்த 1949-ஆம் ஆண்டு வெறும் இரண்டு வகுப்பறைகளுடன் தொடங்கப்பட்ட இப்பள்ளி, இன்று இப்பகுதியின் கல்வி வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறது. இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை தலைமை நிபுணருமான மருத்துவர் ஓ.ஜே. பரமசிவன், தான் பயின்ற பள்ளியின் வளர்ச்சிக்காகத் தனது குடும்பத்தின் சார்பில் 51 சதவீத பங்களிப்பாக ரூ. 1.27 கோடியை நன்கொடையாக வழங்கினார். இதனுடன் தமிழக அரசின் பங்களிப்புத் தொகையான ரூ. 1.22 கோடியும் சேர்க்கப்பட்டு, மொத்தம் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த புதிய மூன்று தளக் கட்டடம் கம்பீரமாக எழுப்பப்பட்டுள்ளது.
இந்த விழாவிற்கு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கி, புதிய கட்டடத்தின் கல்வெட்டைத் திறந்து வைத்துச் சிறப்புப் பேருரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள் இதுபோன்று முன்வருவது பாராட்டுக்குரியது எனத் தெரிவித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மான்விழி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் புதிய கட்டடத்தை அதன் நன்கொடையாளரான மருத்துவர் ஓ.ஜே. பரமசிவன் திறந்து வைத்து, தனது பள்ளிப்பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். அவரது துணைவியாரும், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலருமான ஓ.எஸ். வாசுகி குத்துவிளக்கேற்றி விழாவை மங்கலமாகத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்றச் செயலரும் ஆணையருமான சி.கே. ராமசாமி, தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு பொதுச் செயலாளர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் நன்கொடையாளர் குடும்பத்தினர், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர். விழாவின் நிறைவில் பள்ளித் தலைமையாசிரியர் குணசுந்தரி நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது. ஒரு முன்னாள் மாணவனின் உயர்ந்த எண்ணத்தால் உருவான இந்த நவீனப் பள்ளிக் கட்டடம், ஓடத்துறை கிராம மாணவர்களின் கல்விச் சூழலில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















