புதுடில்லி : வாடிக்கையாளர்களிடம் கடன் வசூலிக்கும்போது மரியாதையுடனும் நன்மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.
டில்லியில் நடைபெற்ற வங்கி சாரா நிதி நிறுவனங்களின் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர், “கடன்களை வசூலிக்கும்போது வாடிக்கையாளர்களை கண்ணியமற்ற முறையில் அணுகக்கூடாது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றி, மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
அதையடுத்து, “ரூ.500 வரை மட்டும் தாமதிக்கப்பட்ட கடனுக்காக, நிதி நிறுவன ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்துகொள்வது குறித்து பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. நீங்கள் உங்கள் வேலை செய்ய வேண்டும், ஆனால் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதே நிகழ்வில், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் பங்கைக் குறித்தும் அவர் பேசியார். தற்போது வங்கிகள் வழங்கும் மொத்த கடனில் 24% மட்டுமே வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதை 2047ஆம் ஆண்டில் 50% ஆக உயர்த்தும் நோக்குடன் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டில் ரூ.24 லட்சம் கோடியான வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் அளவு, 2025ல் இரட்டிப்பாகி ரூ.48 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது நாட்டின் வளர்ச்சிப் பாதையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி என அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME), மற்றும் பசுமை ஆற்றல் (Green Energy) துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளார்.
















