திருவாரூரில் சாலையில் அடிபட்டு கிடந்த நாயினை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முதலுதவி அளித்த பெண் தலைமை காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்.
திருவாரூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் வாசுகி. இவர் இன்று மதியம் திருவாரூர் தெற்கு வீதி வழியாக வந்து கொண்டிருந்த பொழுது சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் சிக்கிக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட தெரு நாய் ஒன்று அடிபட்டு கத்திக் கொண்டு இருந்துள்ளது.
இதனைப் பார்த்த பெண் தலைமை காவலர் வாசுகி உடனடியாக அந்த நாயினை தூக்கிக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தின் மூலமாக நேதாஜி சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு மருத்துவர்கள் உடனடியாக அடிபட்ட நாய்க்கு உரிய சிகிச்சை அளித்துள்ளனர். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சாலையில் அடிபட்டு கிடந்த நாயினை தூக்கிச் சென்று மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்க உதவிய பெண் தலைமை காவலரை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.