திருவாரூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து அட்டூழியம். சமையலறையில் இருந்த பொருட்களும் உடைத்து சேதம். மது போதையில் மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனரா என காவல்துறையினர் விசாரணை
திருவாரூர் அருகே காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் காரியங்குடி, நெம்மேலி, இளங்கச்சேரி பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் சமைப்பதற்காக, சமையலர்கள் காலை வந்து பார்த்தபோது, சமையலறையில் இருந்த பொருட்கள் உடைத்து நொறுக்கப்பட்டிருந்தன. மளிகை பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பள்ளியில் உள்ள மாணவர்கள் குடிநீர் அருந்தும் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி உடைக்கப்பட்டு, அதில் மலத்தை கொட்டி வைத்துள்ளனர் . மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் பறிக்கப்பட்டுள்ளன.
மேலும் அங்கு வந்த மர்ம நபர்கள் சிக்கன் சமைத்து சாப்பிட்டு விட்டு அதை அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக பள்ளி தலைமையாசிரியருக்கு தகவல் கொடுத்ததோடு, ஊர் மக்களுக்கும் தெரியப்படுத்தினர். இதனால் பள்ளி முன்பு திரண்ட பெற்றோர்கள், பொதுமக்கள் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டுமென போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இது குறித்து திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பள்ளியில் அனைத்து சமூகத்தை சேர்ந்த மாணவர்களும் படித்து வருவதால் இதில் சாதிய பிரச்சனை ஏதுமில்லை, குடி போதை ஆசாமிகள் தான் இதனை செய்துள்ளார்கள் என்பதை போலீசார் முதல் கட்ட தகவலாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.