கும்பகோணம் அருகே உடையாளூரில் கடந்த 2019ல் தந்தையே மகளுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவு செய்த வழக்கில், தஞ்சை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தந்தை முருகனுக்கு (42) சாகும் வரை ஆயுள் தண்டனையுடன் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு.
கும்பகோணம் அருகேயுள்ள உடையாளூரில் 16 வயதான மைனர் மகளுக்கு, கடந்த 2019 டிசம்பர் 01ம் தேதி அவரது தந்தை முருகன், பாலியல் ரீதியிலான தொந்தரவு தந்ததாக பாதிக்கப்பட்ட மைனர் பெண் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரிலும், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் முருகன் (42) மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். இது குறித்த வழக்கு தஞ்சை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இது வழக்கில் காவல் ஆய்வாளர் ஜெயா விசாரணை மேற்கொண்டு, இதற்கான குற்றப்பத்திரிக்கையினை கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இரு தரப்பு விசாரணையும் நிறைவு பெற்ற நிலையில், குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு, போக்சோ சட்டப்பிரிவு 6ன் படி, சாகும் வரை ஆயுள் தண்டனையுடன் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார். அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.