காதலர் விவகாரத்தில் மகளையே கழுத்து நெரித்து கொன்ற தந்தை

கலபுர்கி மாவட்டம் மேல்குந்தா கிராமத்தைச் சேர்ந்த சங்கர் – மல்லம்மா தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் கவிதா, கல்லூரியில் படித்து வந்தார். சமீபத்தில் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்ததாக குடும்பத்தினர் கூறினர். அதற்கான தகவலை போலீசாருக்கு தெரிவிக்காமல், அவசரமாக விவசாய நிலத்தில் உடலை எரித்தனர்.

ஆனால், கவிதா அதே கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மல்லப்பா புஜாரியை காதலித்து வந்ததாக தகவல் வெளியாகி, அவரது மரணம் குறித்து சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, போலீசார் கவிதாவின் தந்தை சங்கரை விசாரணைக்கு உட்படுத்தினர்.

அப்போது, அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிச்சம் கண்டது. கவிதா வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞருடன் தொடர்பில் இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத பெற்றோர், அவரை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்துவைத்தனர். இருந்தபோதும் கவிதா தனது காதலில் உறுதியாய் இருந்ததால், தந்தை சங்கர் கோபத்தில் மகளையே அடித்து, பின்னர் கழுத்தை நெரித்து கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார். பின்னர், வாயில் விஷம் ஊற்றி தற்கொலை போல காட்டி, உறவினர்களின் உதவியுடன் உடலை விவசாய நிலத்தில் எரித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தில் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் மகாலிங்கப்பா, தத்தப்பா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பெண் குழந்தையின் காதல் தொடர்பை ஏற்காமல், ஆணவக் கொலை செய்த தந்தையின் செயலால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version