சென்னை:
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து, நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் இன்று சென்னை எழும்பூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டத்தை தொடங்கிய அவர், “போராட்டம் வெற்றிபெறும் வரை, சாகும் வரை உண்ணாவிரதம் தொடரும்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026 தொடர்பான பணி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று படிவங்களை வழங்கி வருகிறார்கள். பூர்த்தி செய்யப்பட்ட SIR விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 11 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து செயல்பாடுகளும் முடிந்த பின் டிசம்பர் 16 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும். ஆட்சேபனைகள் பதிவு செய்ய ஜனவரி 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியிடப்பட உள்ளது.
“பிற மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது”
தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வருகிற வடமாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கப்படுவது தவறு என மன்சூர் அலிகான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் வாழ வருகிறவர்கள் எதிரிகள் அல்ல; அவர்கள் பிழைக்கட்டும். ஆனால் தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்குவது மாநிலத்தின் எதிர்காலத்துக்கு ஆபத்து. இதைத் தடுக்க SIR பணிகளை உடனே நிறுத்த வேண்டும்” என்றார். மேலும், SIR பணிகள் வாபஸ் பெறப்படும்வரை போராட்டம் நிறுத்தப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மன்சூர் அலிகான் தொடங்கிய இந்த திடீர் உண்ணாவிரதப் போராட்டம், சென்னை அரசியல் வட்டாரங்களில் பெரும் பேச்சுக்குரிய விஷயமாகியுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த போராட்டம் மேலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
