2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை திமுக அளித்து இருந்தது. ஆட்சி பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தகுதி தேர்வு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி 2010 ஆம் ஆண்டுக்கு முன்னதாக பணியேற்ற ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய திமுக அரசை கண்டித்தும், ஜாக்டோ ஜியோ போராட்டக் குழு சார்பில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களின் சார்பில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்று தங்கள் கண்டனத்தை திமுக அரசுக்கு தெரிவித்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தேர்தலின் போது திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

















