சீர்காழி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை.நாள் ஒன்றுக்கு கூடுதலாக நெல்லை கொள்முதல் செய்ய டெல்டா பாசன விவசாய சங்க மாவட்ட தலைவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டது. மோட்டார் பம்பு செட் மற்றும் மழையை பயன்படுத்தி பெரும்பாலான விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்ட நிலையில், தற்பொழுது பல்வேறு பகுதிகளில் குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சீர்காழி வட்டத்தில் 23 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.இதனிடையே சீர்காழி பகுதியில் பெய்த மழையால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொட்டி வைத்திருந்த நெல் மழையில் நனைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து 13 ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்துள்ள நெல்லை விவசாயிகள் பாதுகாக்க தார் பாய்களைக் கொண்டு மூடி பாதுகாத்து வருகின்றனர். கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 800 முதல் 1000 சிப்பங்கள் வரை மட்டுமே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், கூடுதலாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இது தொடர்பாக டெல்டா பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் கோரிக்கை மனு அளித்தார்.

 
			


















