மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 67,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 45 ஆயிரம் ஹெக்டேரில் நடவுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் தீபாவளியை ஒட்டி ஒரு வார காலம் பெய்த கன மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நடவு செய்யப்பட்ட இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. ஏக்கருக்கு சுமார் 25,000 ரூபாய் செலவு செய்த விவசாயிகள் இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடிய தாமதம் ஏற்பட்டதால் இளம் பயிர்கள் நீரில் அழுகி சேதம் அடைந்தன. இந்தப் பயிர்களை இதுவரை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மக்கள் பிரதிநிதிகள் பார்வையிடவில்லை என்று குற்றம் சாட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்திடம் விவசாயிகள் நடவு செய்யப்பட்ட அழுகிய இளம் நாற்றுகளுடன் வந்து மனு அளித்தனர். குறைதீர்க்கும் கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் சேகர், பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் உதவியாளர்களுக்கு மனு அளித்தால் அவர்கள் நேரில் வந்து புகைப்படம் எடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிப்பார்கள் என்று தெரிவித்தார். உடனடியாக இதற்கு பதில் அளித்த விவசாயிகள் பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்க தங்களுக்கு எந்தவித அறிவுறுத்தலும் வரவில்லை என கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவிப்பதாக குற்றம் சாட்டினர். தொடர்ந்து மழையினால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை கையில் ஏந்தி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட விவசாயிகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் 40% அளவிற்கு இளம் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் வேளாண்துறை சார்பிலும் இதுவரை பாதிக்கப்பட்ட பயிர்களை யாரும் கணக்கீடு செய்யவில்லை என்றும், மக்கள் பிரதிநிதிகள் இது குறித்து கண்டுகொள்ளவில்லை என்றும், கடந்த 2024-25 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெய்த பருவம் தப்பிய மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 63 கோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்த தமிழக அரசு இதுவரை அந்த பணத்தை கூட விடுவிக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு கணக்கெடுப்பு செய்யாவிட்டால் இரண்டு நாட்களில் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்

















