திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அருள் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி சின்ன சூரியூரில் உள்ள 100 ஏக்கர் அரசு தரிசு நிலத்தை போலி பட்டா மூலம் பிளாட் போட்டு விற்றதை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. அதேபோல், திருச்சி உறையூர் சின்ன செட்டி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர்-விசாலாட்சி அம்மன் கோவில் பின்புற நந்தவனத்தில் அமைந்துள்ள காகபுஜண்டா சித்தா மகரிஷி கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அலுவலக பூட்டை பூட்டி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அலுவலக அறைக்குள் அதிகாரிகளும் விவசாயிகளும் இருந்ததால் சூழ்நிலை பதற்றமாக இருந்தது. பின்னர், போராட்டக்காரர்கள் வெளியில் வந்து உதவி கலெக்டர் காரின் முன் அமர்ந்து தர்ணா தொடர்ந்தனர்.
சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்தனர். இந்த போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் மேகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.