மயிலாடுதுறை மாவட்டம்
சீர்காழி சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 62 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா விவசாயத்தை விவசாயிகள் மேற்கொண்டு உள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் சம்பா விவசாயம் நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் புதிய செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சீர்காழி அருகே வேட்டங்குடி பகுதியில் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களை மாவட்ட வேளாண்துறை இயக்குனர் சேகர் தலைமையிலான அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது அங்கு சென்ற விவசாயிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை புதிய செயலி மூலம் கணக்கெடுப்பதால் நிவாரணம் கிடைப்பதற்கு தாமதமாம் ஏற்படும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த செயலி மூலம் பாதிக்கப்பட்ட விவசாயி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்து அதன் பிறகு வேளாண் துறை அதிகாரி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயி நிலத்திற்கும் சென்று விவசாயியை நிற்க வைத்து புகைப்படம் எடுக்க வேண்டும் அதன் பிறகு நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட துறை மேல் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். இந்த புதிய முறையால் நிவாரணம் வழங்க காலதாமதம் ஏற்படும் என விவசாயிகள் குற்றம் சாட்டினர்
தொடர்ந்து செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடக் கூடாது என தெரிவித்தனர். கடந்தாண்டு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை கணக்கெடுத்தும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனவும் இந்த ஆண்டு புதிய செயலி மூலம் கணக்கெடுப்பதால் தாமதம் ஏற்பட்டு நிவாரணம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர். முந்தைய கணக்கெடுக்கும் முறையை பயன்படுத்தி தேர்தல் நெருங்குவதற்குள் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
