கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக, தோட்டக்கலைத் துறை சார்பில் ராபி பருவ காய்கறி சாகுபடி நுட்பங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்த செயல்முறை விளக்கக் கருத்துக்காட்சியும், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை சார்பில் இரண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் அடங்கிய சிறப்புக் கண்காட்சியும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதனை ஆட்சியர் மற்றும் விவசாயிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது நீண்டகாலக் கோரிக்கைகளை ஆட்சியரிடம் மனுக்களாக அளித்தனர். குறிப்பாக, விவசாயத்திற்குப் பெரும் சவாலாக இருக்கும் நீர் வழிப்பாதைகளில் மண்டிப் கிடக்கும் முட்புதர்களை அகற்றவும், குளம் மற்றும் குட்டை போன்ற நீர்நிலை ஆக்கிரமிப்புகளைத் தடுத்து அவற்றைப் பாதுகாக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். மேலும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைப் பயன்படுத்தி நீர்நிலைகளைத் தூர்வாருதல், சாலை ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள முட்புதர்களை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளக் கோரிக்கை விடுத்தனர். தென்னை நார் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்கவும், விளைநிலங்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்தவும், நொய்யல், கௌசிகா மற்றும் பவானி ஆகிய ஆறுகளில் சாயக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து நதிகளைப் பாதுகாக்கவும் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவரிடம் விவசாயிகள் கண்ணீர்மல்கக் கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகளின் ஒவ்வொரு கோரிக்கையையும் கனிவுடன் கேட்டறிந்த ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், முதுநிலை மண்டல மேலாளர் பழனிகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அழகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் தமிழ்செல்வி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆனந்தகுமார் உள்ளிட்ட அரசுத் துறை உயர் அலுவலர்கள் மற்றும் மாவட்டம் முழுவதிலும் இருந்து திரளான விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.
