திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்குச் சேர்ந்த வடகாடு மலைப்பகுதியில் அமைந்துள்ள பரப்பலாறு அணை, கடந்த பல தசாப்தங்களாக தூர்வாரப்படாமல் இருந்த நிலையில், தற்போது ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடமிருந்து தூர்வார அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அணையின் மொத்த உயரம் 90 அடி, கொள்ளவு 197.95 மில்லியன் கனஅடி ஆகும். இந்த அணை மூலம் தாசரிபட்டி முத்துபூபாலசமுத்திரம், விருப்பாட்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையகுளம், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூர் ராமசமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் உள்ளிட்ட ஆறு முக்கிய குளங்களுக்கு பாசன வசதி வழங்கப்படுகிறது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் 2034 ஏக்கரும், கரூர் மாவட்டத்தில் 289 ஏக்கரும் நேரடி மற்றும் மறைமுக பாசன நன்மை பெறுகின்றன. அதோடு ஒட்டன்சத்திரம் நகர மக்களுக்கான முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பரப்பலாறு அணை செயல்பட்டு வருகிறது.
2014–2015 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.19.50 கோடியில் அணையைத் தூர்வாருவதாக சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பணிகள் நடைமுறைக்கு வராமல் ஆண்டுகள் கடந்தன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி தனது தேர்தல் அறிக்கையில் பரப்பலாறு அணையை தூர்வாருவதாக உறுதி அளித்து தீவிரமாக செயல்பட்டார். இதன் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு குழு ஆய்வு மேற்கொண்டது. தற்போது, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அணையின் 90 அடி சேமிப்பு உயரத்தை மீட்டெடுக்க தூர்வார பணிக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. அணை கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாததால், வண்டல்மண் அதிகளவில் சேர்ந்து, அணையின் நீர்தேக்க திறன் குறைந்து, குடிநீர் பற்றாக்குறைவும் பாசனத் தட்டுப்பாடும் ஏற்பட்டிருந்தன.
உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் சிவக்குமார் கருத்து தெரிவிக்கையில், “2015 முதல் தொடர்ந்து எம்எல்ஏ அர. சக்கரபாணி சட்டசபையில் கோரிக்கை வைத்தபோதிலும் பணிகள் நடைபெறவில்லை. தற்போது திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதி நிறைவேறியிருக்கிறது. ஒன்றிய அரசு அனுமதி பெற நடவடிக்கை எடுத்த முதல்வருக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும் விவசாயிகள் சார்பில் நன்றி” என்றார்.
