சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே உள்ள செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியில் (டோல்கேட்), இதுவரை இல்லாத வகையில் விவசாயப் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் டிராக்டர்களுக்குக் கட்டணம் வசூலிக்க முற்பட்டதைக் கண்டித்து, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் இணைந்து டோல்கேட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் செண்பகம்பேட்டை டோல்கேட்டில், விவசாயம் மற்றும் உள்ளூர் பயன்பாட்டிற்காக இயக்கப்படும் டிராக்டர்களுக்கு இதுவரை கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இது விவசாயிகளிடையே வழக்கமாக இருந்து வந்தது.
ஆனால், அந்த வழியாக டிராக்டர் ஓட்டி வந்த விவசாயி ஒருவரிடம், டோல்கேட்டைக் கடந்து செல்ல ரூ.260 கட்டணம் செலுத்த வேண்டும் என்று அங்கிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக டிராக்டர் உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து டோல்கேட் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கீழச்சீவல்பட்டி காவல்துறையினர், தற்காலிகமாகச் சமரசம் செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை நீக்கக் கோரியும் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலதரப்பட்டவர்களும் டோல்கேட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தத் தொடங்கினர்.
டோல்கேட் வழியாக மற்ற வாகனங்கள் செல்வதைத் தடுக்கும் வகையில், மூன்று டிராக்டர்களை நிறுத்தி சாலையை மறித்ததால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுப் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள், முக்கியமாக மூன்று புகார்களை முன்வைத்தனர்:
விவசாய டிராக்டர்களுக்கு உடனடியாகக் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்க வேண்டும். இந்தச் சாலை உண்மையில் இருவழிச் சாலையாக (Two-Lane) மட்டுமே உள்ள நிலையில், அதற்குக் கட்டணம் வசூலிக்காமல், நான்குவழிச் சாலைக்கான (Four-Lane) கட்டணத்தை அதிகமாக வசூல் செய்கின்றனர். டோல்கேட் அருகே சில கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்குரிய சலுகைக் கட்டணத்தை (Concessional Toll Fee) முறையாகச் செயல்படுத்தவில்லை.
இதையடுத்து, புகார்களை எழுத்துபூர்வமாக அளித்தால், அது குறித்து உரிய மேல் அதிகாரிகளுக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகப் போலீசார் உறுதி அளித்து, போராட்டக்காரர்களைச் சமரசம் செய்தனர். இதன் காரணமாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும், இந்தப் பிரச்சினைகள் குறித்து கீழச்சீவல்பட்டி காவல் நிலையத்தில், ‘டோல்கேட்டில் விவசாய டிராக்டர்களை இலவசமாக அனுமதிக்க வேண்டும், இரண்டுவழிச் சாலைக்கான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும், கூடுதலாகக் கட்டணம் வசூலித்தவர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் முறைப்படியான புகார் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளில் கைவைக்க முற்படும் இதுபோன்ற செயல்கள், விவசாயப் பணிகளை மேலும் பாதிக்கும் என்று அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
















