தரங்கம்பாடியில் 2004 சுனாமியால் உயிரிழந்த 319 பேருக்கு குடும்பத்தினர் தர்பணம் கொடுத்து மௌன ஊர்வலம். நினைவு ஸ்தூபி மற்றும் நினைவிடத்தில் அஞ்சலி. பூம்புகார் எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்பு:-
தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி ஆழிபேரலை தாக்கியது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் பலியாயினர். இதில் தரங்கம்பாடியில் மட்டும் 319 பேர் உயிரிழந்தனர். சுனாமியால் உயிரிழந்த அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினரும் கிராம மக்களும் ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தி வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில் 21 ஆம் ஆண்டு சுனாமி நினைவஞ்சலி இன்று தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் அனுசரிக்கப்பட்டது. மீன் விற்பனை கூடத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் யாகம் வளர்த்து தர்ப்பணம் செய்து கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தி வழிபாடு செய்தனர். தொடர்ந்து கிராம மக்கள் கருப்பு பேச் அணிந்து 1000 க்கும் மேற்பட்டோர் மவுன ஊர்வலமாக தரங்கம்பாடி கடை வீதியில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார், பின்னர் தரங்கம்பாடி பழைய ரயில் நிலையம் அருகே சுனாமியால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்த இடத்திற்கு சென்று மாலை அணிவித்து மலர்வளையம் வைத்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். இதில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் அகோரம், முன்னாள் எம்எல்ஏ பாலா அருட்செல்வன் , மாவட்ட துணைசெயலாளர் ஞானவேலன், திமுக ஒன்றிசெயலாளர் அமுர்தவிஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதுபோல் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சந்திரபாடியில் கிராமத்தினர் நினைவு ஸ்தூபியில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மாவட்டத்தில் சின்னூர்பேட்டை, சின்னங்குடி, குட்டியாண்டியூர், வெள்ளகோயில், மாணிக்கபங்கு, உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

















