சென்னை :
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மீண்டும் மலர அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கட்சியின் முன்னாள் இடைக்கால பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :
“தமிழ்நாட்டு மக்களின் நலனை காக்க ஒருங்கிணைந்த அதிமுக மட்டுமே தீர்வு. தொடர்ச்சியாக தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைவது வருத்தம் அளிக்கிறது. இனி அமைதியாக பார்ப்பது, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
‘ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, தற்போது திமுக அரசு குளிர் காய்ந்து மகிழ்கிறது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், ஆனால் இனி நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை மதித்து, அனைவரும் கை கோர்த்து செயல்பட்டால், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி நிச்சயம் என்பதை நம்புகிறேன்” என சசிகலா தெரிவித்துள்ளார்.