துணை நடிகை ரேச்சலின் பியூட்டி பார்லர் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின், பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “சினிமாவில் இருந்த காலத்தில் விஜய் எனக்கு தம்பி போன்றவர். ஆனால் தற்போது அவர் அரசியல்வாதியாகிவிட்டதால், எங்கள் உறவு மாறிவிட்டது. அதுவும் அவர் கடுமையான உழைப்பாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என தெரிவித்துள்ளார்.
மேலும் தெருநாய் பிரச்சனை குறித்து, “இதுபற்றி படித்தவர்கள் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்,” எனவும், இசையமைப்பாளர் இளையராஜாவை புகழ்ந்து, “இளையராஜா நமக்கெல்லாம் தாய், தந்தை மாதிரி; அவருடைய பாடல்கள் தாய்ப்பாலுக்கு நிகரானவை,” என்றும் மிஷ்கின் பாராட்டினார்.
அப்போது, விஷால் திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின், “விஷால் என்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்றாலும், தள்ளி நின்றாவது அவருக்காக பிரார்த்தனை செய்வேன்,” என்று கூறினார்.
விஷால்–மிஷ்கின் நட்பு முறிவு
2017ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் விஷாலும், மிஷ்கினும் இணைந்து பணியாற்றினர். படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 திரைப்படமும் லண்டனில் தொடங்கியது. ஆனால் பட்ஜெட்டைச் சுற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மிஷ்கின் திட்டத்திலிருந்து விலகினார். பின்னர், படத்தை தானே இயக்கி, நடிப்பதாக விஷால் அறிவித்தார்.
ஒருகாலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த இருவரும், இந்தச் சம்பவத்துக்குப் பின் உறவை முறித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, பொதுக்கூட்டத்தில் விஷாலை “பொறுக்கி பய” என்று திட்டிய அளவுக்கு மிஷ்கின் சென்றார். ஆனால் பின்னர், “விஷால் நல்ல மனிதர்; அவரை நான் விரும்புகிறேன். ஆனால் அவருக்கு என்னை விட அதிக ஈகோ உள்ளது. அதனால் அவர் என்னிடம் பேசமாட்டார்,” என்று சமரசமாக பேசியிருந்தார்.
 
			














