கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற துயரச்சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென பல்வேறு தரப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, முக்கியமான விளக்கமொன்றை அளித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலால் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விஜய் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “கரூர் விபத்தைப் பொருத்தவரை விஜய் மீது முதல் குற்றவாளியாக வழக்கு பதிவு செய்தால் கூட, அந்த வழக்கு நிலைநிற்காது. இதுபோன்ற சூழ்நிலையில் ஹைதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் வழக்கிலும் இதேபோல நடந்தது. அரசியல் நோக்கத்திற்காக கைது செய்யலாம், ஆனால் மறுநாளே ஜாமீனில் விடுதலை ஆகிவிடுவார்கள். இது சின்னப்பிள்ளைகள் விளையாடும் விளையாட்டுக்கு ஒத்தது,” எனக் கூறினார்.
மேலும் அவர், “அரசு உண்மையில் உறுதியுடன் இருந்தால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும்—அதிகாரிகள் முதல் நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்ற கீழ்மட்ட நிர்வாகிகள் வரை—அவர்களை விசாரிக்க வேண்டும். தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் விஜயை குற்றவாளியாக மாற்ற முயற்சிப்பது சட்டரீதியாக சாத்தியமில்லை,” எனவும் தெரிவித்துள்ளார்.
பாஜக விஜய்க்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அவர், “பாஜகக்கு தமிழக வெற்றிக்கழகத்தையோ அல்லது விஜயையோ காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இல்லை. நியாயமான இடத்தில் நியாயத்தைப் பேசுகிறோம். ஆளுங்கட்சியால் ஒரு நபர் அல்லது கட்சி நசுக்கப்படுவதாக தெரிந்தால் அதற்கு எதிராக கருத்து தெரிவிப்போம். அதற்காக பாஜக அடைக்கலம் கொடுக்கிறது என கூறுவது தவறு,” எனவும் அண்ணாமலை தெளிவுபடுத்தினார்.