மாமல்லபுரத்தில் தவெக சார்பில் நடத்தப்படும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா !

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ‘ஃபோர் பாயிண்ட்ஸ்’ நட்சத்திர ஓட்டலில் இன்று சமத்துவக் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் தவெக தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

காலை 10.30 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். சுமார் 1500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள இந்த விழாவில், QR கோடு கொண்ட அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்களே உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, தீபாவளி உள்ளிட்ட சில விழாக்களை தவெக கட்சியினர் எளிமையாகக் கடைப்பிடித்த நிலையில், கிறிஸ்துமஸ் விழாவை ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாட்டுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் இன்று காலை தனது இல்லத்திலிருந்து காரில் புறப்பட்டு, மாமல்லபுரம் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அவரது வருகையை முன்னிட்டு, விழா நடைபெறும் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஓட்டல் முன்பாக ஊடகங்கள் வரிசையாக காத்திருக்கும் நிலையில், அனுமதிச்சீட்டு இல்லாதவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், வழக்கத்தைவிட மகாபலிபுரம் பகுதியில் அமைதியான சூழல் நிலவுகிறது.

Exit mobile version