“முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் இருக்கக் கூடாது ; டிடிவி சொன்னது நல்ல கருத்து” – ஆதரவு தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம்

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவருவதையொட்டி, என்.டி.ஏ கூட்டணியில் உள்ள அதிமுக தற்போது பல சவால்களை எதிர்கொண்டு உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய அமமுக மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அணி தற்போது மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், டி.டி.வி. தினகரன், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு ஒருவரை அறிவித்தால், அவர்களும் மீண்டும் கூட்டணியில் இணைவார்கள் என்று முன்பே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து, “அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது எந்த ரூபத்தில் வந்தாலும், அதனை முழு மனதோடு நான் ஏற்கிறேன். எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கக் கூடாது என டிடிவி தினகரன் கூறியிருப்பது நல்ல கருத்து. அதிமுக ஒன்றிணைவதே முக்கியம். இந்த விவகாரத்தில் நான் எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை. ஒன்றிணைந்த பிறகு, எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுவதற்கு முன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச வேண்டியது அவசியம். குறிப்பாக, தர்மயுத்தத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் உள்ளன” என்றார்.

மேலும், நேற்று இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “அதிமுகவில் இருக்கும் ஒரே நபரைத் தவிர எங்களுக்கு வேறு பிரச்சனை இல்லை. அதிமுக முதல்வர் வேட்பாளரை நாம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அறிவித்தால் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. கூட்டணியில் சேர்வோம்” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version