பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நடத்திய சந்திப்பு, தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணிக் கலந்துரையாடலில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக – அதிமுக கூட்டணிகள் உறுதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வேளையில், பாமக மற்றும் தேமுதிக எந்த அணியில் இணையப்போகின்றன என்பதே அரசியல் கவனத்தின் மையமாகியுள்ளது.
பாமக தற்போது இரண்டு பிரிவுகளாக செயல்படுகிறது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பிரிவு பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது; ஆனால் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாஜக எதிர்ப்பு மனநிலையிலேயே உள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸை பல்வேறு கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை சந்தித்து நலம் கேட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, நேற்று எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு சென்று ராமதாஸை சந்தித்தது புதிய அரசியல் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.
இருவரும் சுமார் 30 நிமிடங்கள் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியதாக பாமக எம்.எல்.ஏ அருள் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். “அவர்கள் இருவரும் தனியாகப் பேசினார்கள்; என்ன விவாதம் நடந்தது என எனக்குத் தெரியாது. ஆனால் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு முக்கிய ஆலோசனைகள் நடந்திருக்கலாம்,” என அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பு, அதிமுக–பாமக கூட்டணிக்கான தொடக்க பேச்சுவார்த்தையாக இருக்கலாம் என்ற ஊகங்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகின்றன.