சென்னை: 2026ம் ஆண்டில் நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அமரப்போகிறார் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியபோது கூறியதாவது:
“மூப்பனார் வழியில் நேர்மையான அரசியலை தமிழகத்திலும், இந்தியாவிலும் நிலைநிறுத்த அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். 2026ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் தொடங்கிப் பேசிவிட்டார்கள். சாதாரண மக்களிடமும், தேநீர் கடைகளிலும் கூட அரசியல் மாற்றம் குறித்த விவாதங்கள் நடந்து வருகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ் தான். அவர் சிறிது நேரத்திற்கு முன் இந்த மேடையில் பேசி சென்றார். 2026ல் நிச்சயமாக அவர் முதல்வர் நாற்காலியில் அமரப் போகிறார். ஏழை மக்களுக்காக அரசு விடிவெள்ளியாக செயல்படும் ஒரு புதிய புரட்சி ஏற்பட வேண்டும்,” என்றார்.
மேலும், “ஜி.கே. மூப்பனார் மேலிருந்து நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரது ஆசை 2026ம் ஆண்டு தேர்தலில் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைத்து தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என அண்ணாமலை கூறினார்.