சென்னை: 2025–26 கல்வியாண்டுக்கான இன்ஜினியரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நிறைவடைந்துள்ளது. இந்த முறை, மொத்த இடங்களில் 80 சதவீதம் நிரம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், 36,446 இடங்கள் காலியாக உள்ளன.
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் 423 இன்ஜினியரிங் கல்லூரிகளில், ஜூலை 7-ஆம் தேதி கவுன்சிலிங் தொடங்கியது. சிறப்பு பிரிவு மற்றும் பொதுப் பிரிவு கவுன்சிலிங் மூலம், மொத்தம் 1,90,624 பி.இ., – பி.டெக்., இடங்களில், 1,45,481 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.
அதன்பின், இன்ஜினியரிங் துணை கவுன்சிலிங் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில், 7,964 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். தொடர்ந்து, எஸ்.சி., – எஸ்.சி.ஏ., பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 25-ஆம் தேதி தொடங்கி நேற்று (27-ஆம் தேதி) நிறைவடைந்தது. இதில், 729 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும், தொழிற்கல்வி பிரிவில் நான்கு பேருக்கு சீட் வழங்கப்பட்டது.
இதன் மூலம், மொத்தம் 1,54,178 இடங்கள் நிரம்பியுள்ளன. முதல் முறையாக 80 சதவீத சீட்கள் நிரம்பியுள்ளதும், கல்வி வட்டாரங்களில் சிறப்பாகக் கருதப்படுகிறது. ஆனால், 36,446 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன.
மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 18 சீட்கள் நிரம்பாமல் உள்ளன. இவை ‘உயர்வுக்கு படி’ திட்டத்தின் கீழ் நிரப்பப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.